Published : 01 Aug 2014 06:13 PM
Last Updated : 01 Aug 2014 06:13 PM

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் எழுதும் கடிதங்களை கீழ்மையாகச் சித்தரித்த இலங்கை அரசின் அதிகாரபூர்வ வலைதள விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் "இந்திய வெளியுறவு அமைச்சகம், இலங்கை தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து அதிருப்தியைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிவரும் கடிதங்கள் குறித்து கொச்சைப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை பதிவேற்றப்பட்டிருந்தது.

'நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?' என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.

இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் கூறும்போது, “மீனவர்கள் படகுகளை இலங்கை திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிவருவதைக் கொச்சைப் படுத்தும் விதமாக அந்த மீனவர்கள் என்னுடைய ஆதரவாளர்கள் என்று எழுதியுள்ளனர்.

மேலும், இந்திய ஜனநாயக அமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக இந்தியப் பிரதமரின் பெயருக்கும், புகழுக்கும் நான் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரம் கொண்ட ஒரு வலுவான ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்டதிலிருந்து நான் பல விமர்சனங்களையும் எதிர்கருத்துக்களையும் எதிர்கொண்டுள்ளேன். ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான ஒரு பிரச்சினையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செய்யும் முயற்சிகளை இப்படி நேரடியாகக் கொச்சைப் படுத்தி, சிறுமைப் படுத்தி எழுதப்பட்டிருப்பது, அதுவும் அண்டை நாடு ஒன்றின் முக்கிய அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இதுபோன்று எழுதப்படுவது ஒரு போதும் ஏற்புடையதல்ல.

அதில் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கீழ்மைப்படுத்தும் விதமாகவும் குறிப்பாக பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற 66 வயது பெண் அரசியல் தலைவரைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

ஆகவே, நாட்டையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் இத்தகைய முயற்சிகளை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும், முக்கியமாக அந்த வலைத்தளத்தின் உரிமைத் துறப்பு வாசகம், வலைத்தளத்தில் தனிநபர் பங்களிப்புடன் எழுதப்படும் உள்ளடக்கங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பேற்காது என்று கூறியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள், கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரைச் சார்ந்தது அல்ல. மாறாக இலங்கை அரசுடையதுதான் என்பதை அறிவுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் இது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்த பிறகு அந்தக் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அது நிறைய சேதங்களை விளைவித்துவிட்டது.

எனவே, இலங்கைத் தூதரை நேரில் அழைத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தியை வலிமையாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x