15 நாட்களுக்கு மேலாகியும் சீராகாத குடிநீர் விநியோகம்: நெல்லையில் பெண்கள் சாலை மறியல்

படம்: மு.லெட்சுமிஅருண்
படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு, விநியோகிப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீரேற்று நிலையங்கள் அனைத்தும் மூழ்கின.

மின் மோட்டார்கள் மூழ்கியும், குடிநீர் குழாய்கள் உடைந்தும் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டது. குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் இன்னும் சீரமைக்கப்பட வில்லை என்றும், லாரிகள் மூலமும் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் மேல தெரு, கீழத் தெரு, சாமியா தைக்கா பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்தும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கோரியும் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் திருநெல்வேலி - தென்காசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in