Published : 20 Jan 2018 09:17 PM
Last Updated : 20 Jan 2018 09:17 PM

நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் மாணவர் குத்திக் கொலை: கொலையாளியைத் தேடும் போலீஸார்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்தவர் ரமேஷ் (49). இவரது மகன் ரஞ்சித்(19). இவர் கிண்டி தொழில் நுட்பக் கல்லூரியில் ITI படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று வருவதாகக் கூறி நேற்று மாலை 7.30 மணிக்கு வெளியே சென்றுள்ளார். இரவு 11.45 மணி அளவில் கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் தான் பீச் ரயில் நிலயத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்து வந்த ரஞ்சித்தை லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் மடக்கி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ரஞ்சித் குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் விழுந்து இறந்து போனார்.

லயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2-வது தெரு முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருப்பதைப் பார்த்த போலீஸார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் கழுத்துப்பகுதியில் ஆழமான கத்திக்குத்து காயம் உள்ளது. குளக்கரை சாலையிலிருந்து விரட்டி விரட்டி குத்திக் கொல்லப்பட்டுள்ளார் ரஞ்சித். கைப்பற்றப்பட்ட ரஞ்சித்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

கொல்லப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் மரணமடைந்துள்ளார். குடும்பத்தின் ஒரே ஆதரவான மகனையும் பறிகொடுத்துவிட்டு தாயார் சரஸ்வதி மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதது போலீஸாரையே கண்கலங்க வைத்தது.

மிகவும் கொடூரமாக செய்யப்பட்ட இந்தக் கொலைக்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா அல்லது வழிப்பறி முயற்சியில் கொல்லப்பட்டாரா? என நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x