Published : 15 Jan 2018 11:06 AM
Last Updated : 15 Jan 2018 11:06 AM

சமரசம் செய்து கொள்ளாதவர்; தனித்தன்மையை இழக்காதவர்: ஞாநி மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத; தனித்தன்மையை இழக்காத பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு வேதனையும் துயரமும் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பத்திரிகையாளரின் மகனாகப் பிறந்து பத்திரிகையாளராக உருவானதுடன் தம்மைப் போலவே ஏராளமான பத்திரிகையாளர்களை உருவாக்கியது ஞாநியின் சிறப்பு ஆகும். பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்பதைத் தாண்டி சிறந்த நாடக ஆசிரியராகவும், குறும்பட இயக்குனராகவும் சிறப்பாக செயல்பட்டவர்.

எண்ணற்ற ஊடகங்களில் பணியாற்றினாலும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவர்; தனித்தன்மையை இழக்காதவர்; தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் ஏராளமான அரசியல் தலைவர்களுடன் பழகினாலும் அதை தன்னலனுக்காக பயன்படுத்திக் கொள்ளாதவர் என்பது அவரது சிறப்புகளில் சில.

சமகால அரசியல் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் குறித்தும் என்னுடன் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளார். அரசியல் களத்திலும் கால் நனைத்துப் பார்த்தவர். பன்முகம் கொண்ட ஞாநி இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்காக உழைத்திருக்க வேண்டும். ஆனால், 64 வயதில் அவர் மறைந்தது அவர் சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் இழப்பு தான்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இதழாளர்கள், அவரது மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x