Published : 03 Jan 2018 03:06 PM
Last Updated : 03 Jan 2018 03:06 PM

மோசமான நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை; 51% கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை: திருநாவுக்கரசர்

கிராமப்புற கர்ப்பிணிகளில் 52 சதவீத பேரை ரத்த சோகை நோய் தாக்கியுள்ளது. குழந்தைகள், தாய்மார்களுக்கு ஊட்ட உணவில்லை என ஆதாரத்துடன் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முதன்மை இடத்தைப் பெற்றிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி பெருமைப்பட்டிருக்கிறார். இது உண்மையாக இருந்தால் பெருமைப்படுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

அடிப்படை ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பின் பயன்பாட்டையும், மக்களுக்கு கிடைக்கும் நல்வாழ்வு சேவைகளையும் சிசு மரண விகிதம் மற்றும் கர்ப்பகால மரண விகிதம் போன்ற குறியீடுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த குறியீடுகளின் அடிப்படையில் பார்த்தால் ஏற்கெனவே முன்னேறிய நிலையில் இருந்த தமிழகம் பின்னோக்கிச் செல்வதை உறுதியாகக் கூற முடியும்.

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய பல நல்ல திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. காமராஜர் ஆட்சியில் இலவசக் கல்வி, மதிய உணவு போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தன. அன்று மாநில அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம், இன்று தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தகைய பெருமைகளைப் பெற்ற தமிழகம் இன்று பல துறைகளில் ஊழலும், திறமையின்மையும் தலைவிரித்தாடி வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை குறித்து முதல்வர் கூறியிருப்பது சரியா என்பதை புள்ளி விவரங்கள் முற்றிலும் மறுக்கின்ற வகையில் உள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் செயல்பட்டு வந்த போதிலும் தமிழக மக்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இல்லை என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. குழந்தைகளுக்காக சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் போன்றவை நெடுங்காலமாக செயல்படுத்தப்பட்டும் கூட, தமிழக மக்களின் உடல்நிலை பெருமைப்படக் கூடிய நிலையில் இல்லை. 2015-16 ஆண்டை அடிப்படையாக கொண்டு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை கூறுகிற புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளன.

அதன்படி 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளில் 51 சதவீத குழந்தைகள் ரத்த சோகையோடு உள்ளனர். கிராமப்புற கர்ப்பிணிகளில் 52 சதவீத பேரை ரத்த சோகை நோய் தாக்கியுள்ளது. 6 மாதம் முதல் 23 மாதம் வரை வயதுள்ள குழந்தைகளில் 31 சதவீத குழந்தைகள் மட்டுமே போதுமான உணவைப் பெறுகின்றனர். 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 19 சதவீதம் பேரும், ஆண்களில் 16 சதவீதம் பேரும் ரத்த சோகையோடு உள்ளனர்.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேருக்கு உயரத்திற்கு ஏற்ற எடை இல்லை. இதுதான் தமிழகத்தின் அவல நிலை. பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டாலும், தமிழகத்தின் அவலநிலை தொடர்வது ஏன் ? ஆரோக்கியமான வாழ்வு அமையாதது ஏன்?

வெறும் உணவினால் ஆரோக்கியம் வராது என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுப்பது ஏன் ? அந்த உணவில் சத்து இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய சுகாதாரத்துறை தூங்கிக் கொண்டிருப்பது ஏன் ? மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தவுடன் தூய்மை இந்தியா பற்றி நிறைய பேசப்பட்டு வருகிறது.

இதன்படி 52 சதவீதம் பேர் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இது கிராமப்புறங்களில் 63 சதவீதமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 67 சதவீதம் பேரும், தமிழகத்தில் 77 சதவீதம் பேரும் திறந்த வெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்றுநோய் சுலபமாக பரவுவதற்கு வாய்ப்பு உருவாகிறது. இந்தப் பின்னணியில் என்ன உணவு உண்டாலும் ஏழை எளிய மக்களின் நலவாழ்வு மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இதனால் ரத்த சோகையும், எடைக் குறைவும், வளர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுகின்றன. இத்தகைய காரணங்களால் தமிழக சுகாதாரத்துறை எந்தளவுக்கு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொள்ள மறுப்பார்களேயானால் அதனால் கடுமையாக பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், இனியாவது உறுதியான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து சுகாதாரத்துறை முதன்மை நிலை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.''

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x