Last Updated : 14 Jan, 2018 09:36 AM

 

Published : 14 Jan 2018 09:36 AM
Last Updated : 14 Jan 2018 09:36 AM

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு ஒரே நாளில் ரூ.750 கோடி பட்டுவாடா

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 4,500 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.750 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. வங்கி கணக்கில் பணப்பலன் வரவானதும் செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல் வந்து குவிந்ததால் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.4-ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றம் தடை விதித்த பின்பும் போராட்டம் தொடர்ந்தது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்பின்பும் போராட்டம் கைவிடப்படவில்லை.

இந்நிலையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் அரசு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமனம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 8 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

ரூ.750 கோடி வழங்கல்

இந்நிலையில், முதல்வர் அறிவித்த ரூ.750 கோடியில் சென்னை மெட்ரோ பாலிடன் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.63.7148 கோடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.50.1641 கோடி, விழுப்புரம் கோட்டத்துக்கு ரூ. 89.1548 கோடி, சேலம் கோட்டத்துக்கு ரூ.116.4794 கோடி, கோவை கோட்டத்துக்கு ரூ.131.3082 கோடி, கும்பகோணம் கோட்டத்துக்கு ரூ. 95.7715 கோடி, மதுரை கோட்டத்துக்கு ரூ.114.7321 கோடி, நெல்லை கோட்டத்துக்கு ரூ.88.6751 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த ரூ.750 கோடியில் இருந்து வருங்கால வைப்பு நிதி பாக்கிக்காக ரூ.174.1995 கோடி, பங்களிப்பு ஓய்வூதிய நிதி பாக்கிக்காக ரூ.20.7641 கோடி, பணிக்கொடை பாக்கி ரூ.161.6768 கோடி, விடுப்பு நாள் ஊதிய பாக்கி ரூ.285.2294 கோடி, ஓய்வூதிய ஒப்படைப்பு பாக்கி ரூ.108.302 கோடி ஒதுக்கப்பட்டது.

ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்

கடந்த 4 ஆண்டுகளாக மொத்தம் 4,500 ஓய்வூதியதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, விடுப்பு நாள் ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்தன. இவர்களில் பலருக்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வந்தன.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மாயாண்டி சேர்வை வழக்கில் நீதிபதிகள் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அரசு அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்து ஓய்வூதியர்களுக்கு ஓரளவு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. இந்த சூழலில் மொத்தமாக ஒரே தவணையில் ரூ.750 கோடி ஒதுக்கியதால், அரசு போக்குவரத்துக் கழகத்தில் 30.11.2017 வரை ஓய்வு பெற்றவர்கள், இறந்த ஓய்வூதியர்களின் வாரிசுகள், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகையும் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

தவணை முறையில் ஓய்வூதியப் பலன்கள் பெற்று வந்தவர்களுக்கும் மொத்த நிலுவையும் ஒரே தவணையில் வழங்கப்பட்டது. ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் நிலுவைத் தொகை அடுத்தடுத்து வரவு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அடுத்தடுத்து செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்து குவிந்ததால் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x