Published : 31 Dec 2023 04:51 AM
Last Updated : 31 Dec 2023 04:51 AM

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்துப் பேசுமாறு அறிவுறுத்தினர்.

அதனடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, தனது அறைக்கு அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பு மாலை 5.30 முதல் 6 மணி வரை நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆளுநருடனான சந்திப்பில், சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கிய மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றுக்குவிரைந்து ஒப்புதல் அளித்து,அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.அப்போதுதான், மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்துக்கும் பயனளிக்கும் என்று முதல்வர், ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.

இதுதவிர, ஆளுநருக்கு முதல்வர் அளித்த கடிதத்தில், அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள உயர்அமைப்புகளின்மீது தான்உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், மாநில நிர்வாகம் மற்றும் மக்களின் நலன் கருதியும், நிலுவை மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்குடனேயே தான் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த மரியாதை... சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சந்திப்பு சமூகமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கக்கூடியவர். ஆளுநரும் முதல்வர் மீது மிகுந்தமரியாதை வைத்திருக்கக்கூடியவர். இவை இரண்டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந்தன. விடை எப்படி வருகிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும்” என்றார்.

அரசியலமைப்பு வரம்புக்கு உட்பட்டு ஆதரவு: தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆளுநர்-முதல்வர் சந்திப்பு சுமூகமாக இருந்தது. ஆளுநரும், முதல்வரும் பரஸ்பரம் மரியாதையைப் பரிமாறிக்கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆளுநரும், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தான் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு, மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x