Published : 25 Jan 2018 09:35 AM
Last Updated : 25 Jan 2018 09:35 AM

சுதந்திரத்துக்கு பிறகு சென்னை மாகாண முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திரத்துக்கு பிறகு சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள், விழுப்புரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த பெருந்தலைவர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தியாகங்கள் புரிந்தவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் ராமசாமி ரெட்டியார் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1947-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக பதவியேற்று 1949 வரை பதவி வகித்தார். விவசாயிகள் மற்றும் ஏழை எளியோரின் முன்னேற்றத்துக்காக சிந்தித்து, உழைப்பு, நேர்மை, கண்டிப்பு, கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சுயதேவை பூர்த்தி, சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோளுடன் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என கருதினார்.

இவரது ஆட்சிக்காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947-ல் இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். மேலும், ஜமீன் இனாம்தார் இவரது ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்டது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவை போற்றும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், அவருக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஓமந்தூர் கிராமத்தில் ரூ.69 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு கடந்த 2013 பிப்.20-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளான பிப்.1-ம் தேதியை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாட, முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ் விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x