Published : 31 Dec 2023 04:08 AM
Last Updated : 31 Dec 2023 04:08 AM
திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப் பட்டுள்ளதால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 18-ம் தேதி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இந்த அதிகன மழைக்குப் பின் ஒரு வாரமாக மழை ஓய்ந்திருந்து. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கி பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று காலை 8 மணிவரை யிலான 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவில் 10 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாப நாசம் அணைக்கு விநாடிக்கு 2,670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து 3,425 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 141.55 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 5,910 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அது உபரியாக அப்படியே திறந்து விடப்பட்டிருந்தது. இது தவிர தென்காசி மாவட்டம் கடனா அணையில் இருந்து வரும் நீர் மற்றும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. திருநெல்வேலி மாநகரில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் மட்டும் 220 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் நாலுமுக்கு பகுதியில் 210 மி.மீ., காக்காச்சியில் 200 மி.மீ., மாஞ்சோலையில் 102 மி.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம் அணையில் 25 மி.மீ. மழை பெய்துள்ளது.
பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 1, சேரன்மகாதேவி- 1.20, மணிமுத்தாறு- 6.80, பாளையங் கோட்டை- 1.20, சேர்வலாறு அணை- 4, கன்னடியன் அணைக்கட்டு- 5.80, களக்காடு- 1.40. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணையில் 6 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ., கருப்பா நதி அணையில் 2.50 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ., தென்காசியில் 1.20 மி.மீ., அடவிநயினார் அணை, செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT