Published : 17 Jan 2018 08:44 AM
Last Updated : 17 Jan 2018 08:44 AM

வார்டு எல்லை மறுவரையறையிலும் மாநில தேர்தல் ஆணையம் குழப்புகிறது: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

வார்டு எல்லை மறுவரையறையில் மாநில தேர்தல் ஆணையம் தேவையின்றி குழப்பி வருகிறது. இதற்காக யாராவது வழக்கு தொடர்ந்தால் அதை காரணம் காட்டி மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2011- மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் வார்டு எல்லை மறுவரையறை பணிகளிலும் மாநில தேர்தல் ஆணையம் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறும்போது, “உயர் நீதிமன்றம் பலமுறை கெடுவிதித்தும் கடந்த 15 மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தற்போது வார்டு மறுவரையறையைக் காரணம் காட்டி தேர்தலை இழுத்துக் கொண்டே செல்கின்றனர். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. தற்போதுள்ள அரசியல் சூழல் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் தேர்தல் தேதி தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் ஜனநாயகத்துக்கு விரோதமாக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறது. இந்த குளறுபடி குறித்து யாராவது வழக்கு தொடர்ந்தால் அதையே காரணம் காட்டி மீண்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்பதுதான் மாநில தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக உள்ளது’’ என்றார்.

பாமக செய்தி தொடர்பாளரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான கே.பாலு கூறும்போது, “வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக தமிழக அரசு சில உட்பிரிவுகளை நீக்கியுள்ளது. ஆட்சேபம் தெரிவிக்க குறிப்பிட்ட அவகாசமும் தரவில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,பழங்குடியினத்தவர்களுக்கும் உள்ளாட்சி துணைப் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மூ.பழனிமுத்து கூறும்போது, “ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்கள் சட்ட நடைமுறைகளை புறம்தள்ளக் கூடாது. சிலர் தங்களுக்கோ, தங்களது உறவினர்களுக்கோ அல்லது தங்களது சாதியினருக்கோ உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகள் வந்து சேர வேண்டுமென்ற நோக்கில் அதிகாரிகளைக் கைப்பாவையாக வைத்துக்கொண்டு, தங்களுக்கு வசதியாக வார்டுகளை மறுவரையறை செய்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு நிச்சயமாக பாதிக்கப்படும். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே இதில் மாநில தேர்தல் ஆணையம் முறையாக களஆய்வு செய்து, தீர்வுகாண வேண்டும்” என்றார்.

இதுகுறி்த்து மாநில தேர்தல் ஆணையாளர் எம்.மாலிக் பெரோஸ்கானிடம் கேட்டபோது, ‘‘வார்டு எல்லை மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்த விஷயத்தில் யாருக்கும் ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டிய அவசியமில்லை. வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து இடஒதுக்கீடு போன்றவற்றையும் எவ்வித குறைபாடுமி்ன்றி முழுமையாக முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வார்டு எல்லை மறுவரையறை குறித்து அனைத்து அரசியல் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் ஜன.5 வரை கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x