Published : 30 Dec 2023 06:08 AM
Last Updated : 30 Dec 2023 06:08 AM

மின்பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைப்பு: புதிதாக திருவள்ளூர் வட்டம் உருவாக்கி மின்வாரியம் உத்தரவு

சென்னை: நிர்வாக வசதிக்காக மின்பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக திருவள்ளூர் வட்டத்தை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சென்னை வடக்கு, காஞ்சிபுரம், கோவை உட்பட 12 மண்டலங்களாகவும், 44 மின்பகிர்மான வட்டங்களாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெறும் பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய கோட்ட அலுவலகங்கள் சென்னை வடக்கு மண்டலத்தின்கீழ் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மின்பகிர்மான மண்டலங்களை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தை புதிதாக அமைத்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது காஞ்சிபுரம் மண்டலத்தின்கீழ் செயல்படும். மேற்பார்வை பொறியாளரின்கீழ் இயங்கும் திருவள்ளூர் வட்டத்தின்கீழ் திருவள்ளூர், திருத்தணி, திருமழிசை ஆகிய கோட்ட அலுவலகங்கள் செயல்படும். சென்னை மண்டலத்தின்கீழ் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஒன்று, தெற்கு இரண்டு ஆகிய பகிர்மான வட்டங்கள் இடம்பெறும்.

சென்னை வடக்கு வட்டத்தின்கீழ் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, அம்பத்தூர் ஆகியவையும், சென்னை மத்திய வட்டத்தின்கீழ் அண்ணாசாலை, எழும்பூர், மயிலாப்பூர், தி.நகர் அலுவலகங்கள் இடம்பெறும்.

சென்னை தெற்கு ஒன்றியத்தின்கீழ் கே.கே.நகர், கிண்டி, அண்ணாநகர் ஆகியவையும், தெற்கு இரண்டின்கீழ் அடையாறு, ஐ.டி. காரிடார், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய அலுவலகங்கள் இடம்பெறும்.

மேலும், சென்னை மேற்கு வட்டத்தின் பெயர் ஆவடியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் கீழ், ஆவடி, போரூர், பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்கள் செயல்படும். இது காஞ்சிபுரம் மண்டலத்தில் இடம்பெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x