Published : 30 Dec 2023 06:15 AM
Last Updated : 30 Dec 2023 06:15 AM

சென்னையில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை: சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகைகூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் அனைவரும், டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த அதிகன மழை பாதிப்புகளிலிருந்து மாநகரை விரைவாக மீட்டதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகரம் முழுவதும் குடிநீர், கழிவுநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இது தொடர்பாகப் புகார் அளித்தால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கவுன்சிலர்களையும் மதிப்பதில்லை. அதேபோன்று நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து சேவைத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டி உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

விரைவில் தேர்தல் வர இருக்கிறது. நாங்கள் மக்களைச் சந்திக்க வேண்டும். அதனால் மக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, வெள்ள பாதிப்பால் பாழான சாலைகள் அனைத்தையும் விரைந்து சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சி வார்டு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறுகவுன்சிலர்கள் பேசினர். இதற்குப் பதில் அளித்த மேயர், ``வார்டு பொறியாளர்கள், வாரந்தோறும் வார்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு அறிக்கை வழங்க வேண்டும்.

சென்னை குடிநீர் வாரியம் தொடர்பாக மன்றத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து, அவ்வாரிய மேலாண் இயக்குநருக்கு அனுப்பி, பதில் பெற்று, தொடர்புடைய கவுன்சிலர்களுக்கு வழங்க ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

சிறப்பு வகுப்பு: மாநகராட்சியின் 81 பள்ளிகளில் 10, 11, 12-ம்வகுப்புகளில் 18 ஆயிரத்து 397 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வதால், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 73 பள்ளி வேலை நாட்களில் மாலை 4 முதல் 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த வகுப்புகளில் மாணவர்களின் சோர்வைப் போக்க ரூ.33 லட்சத்து 87 ஆயிரம் செலவில் வெள்ளை மற்றும் கருப்பு கடலை, பச்சை மற்றும் வெள்ளை பட்டாணி, வேர்க்கடலை, பச்சை பயிறு ஆகியவை சிற்றுண்டியாக வழங்க மன்றத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மேயர் அறிவிப்பின்படி, ரூ.5 கோடியில் 25 விளையாட்டுத் திடல்களை புதுப்பிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,பேரிடர்களின்போது மீட்புமற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடியே 18 லட்சத்தில் 15 வாகனங்கள் வாங்கவும், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு சீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, திட்டக் கண்காணிப்பு பணி, ட்ரோன் சர்வே, அங்கு குப்பை சேகரிப்போருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் திட்டம் போன்றவற்றை சுமார் ரூ.19 கோடியில் மேற்கொள்ளவும் மன்றத்தில்அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x