

பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்களை சாலையின் நடுப்பகுதிகளிலேயே நிறுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மதுரவாயல் மற்றும் தாம்பரம் வந்து பெருங்களத்தூர் வழியாக வெளி மாவட்டங்களுக்கு செல்கிறது. இதற்காக பெருங்களத்தூர் பகுதியில் தற்காலிகமாக பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அரசு பஸ்கள் மட்டும் இதைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரேம் பிரதாப், பாக்கியராஜ் ஆகியோர் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ பகுதியை தொடர்புகொண்டு கூறியதாவது:
ஆம்னி பஸ்கள் பெருங்களத்தூர் பஸ் நிலையத்துக்குள் வர அனுமதியில்லை. பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஸ்ரீ ராம் நிறுவனத்தின் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை ஆம்னி பஸ்கள் பின்பற்றுவதில்லை.
பெருங்களத்தூர் சிக்னல் அருகே தங்கள் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆம்னி பஸ்களை முறைப்படுத்தி இயக்க போக்குவரத்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் இதே புகாரை தெரிவித்தனர்.