Published : 29 Dec 2023 06:11 AM
Last Updated : 29 Dec 2023 06:11 AM
சென்னை: இணையம் சார்ந்த 'கிக்' தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்களில் இணையவழி விற்பனை, வர்த்தக சேவை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான பணியமைப்பில் மரபான முறையில் அல்லாமல், இணையதள நிறுவனங்கள், தொழிலாளர்களிடையே உடன்படிக்கை அடிப்படையில் வேலை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் (Gig) தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்ட அட்டவணையில் சேர்த்துஅரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாரியத்துக்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, நலவாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாரியத்தில் 18 வயதுமுதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின்கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்றதொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT