Published : 31 Jan 2018 11:08 AM
Last Updated : 31 Jan 2018 11:08 AM

‘ஸ்மார்ட் சிட்டி’ வழிகாட்டி நெறிமுறைகளில் திருத்தம் வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி நேரில் வலியுறுத்தல்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை விரைந்து செயல்படுத்த வசதியாக இத்திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வலியுறுத்தினார்.

டெல்லியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசும்போது, “15-வது நிதிக்குழுவில் ஊரக உள்ளாட்சிகளின் நிதித்தேவை தன்னிறைவு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து ‘ஸ்மார்ட் சிட்டி’ குறித்து மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி கடிதம் ஒன்றை அளித்தார். அதன் விவரம்:

இந்தியாவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். வேகமான தொழில்மயம் காரணமாக நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்கிறது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த விஷயத்தில், மக்களுக்குத் தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

12 ஸ்மார்ட் சிட்டிகள்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள 99 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 12 மாநகராட்சிகள் இடம்பெற்றிருப்பதற்கு தமிழக முதல்வர் சார்பில் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருங்கிணைந்த மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டத்தை அமல்படுத்தும்போது கீழ்க்கண்ட சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். இத்திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட பகுதி மேம்படுத்தப்படும்போது, இதர பகுதி மக்களும் அதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒரேநேரத்தில் செய்து தர வேண்டும் என்று கோருவார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கூறுகளில் பெரும்பாலானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவைகளாக இருப்பதால், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை, பேருந்து நிலையங்கள் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே பல்வேறு நகரங்களில் இது போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், அத்தகைய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும்போது மேற்சொன்ன அடிப்படை வசதிகள் மிகவும் அத்தியாவசியம் ஆகும்.

ஸ்மார்ட் சிட்டிக்கு பொதுப் போக்குவரத்து மிகவும் அவசியம். அதனால் நவீன மற்றும் மக்களுக்கு உகந்த பேருந்துகளை வாங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி போர்டுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்ற இந்த சிறப்பான திட்டத்தை வேகமாக செயல்படுத்த மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக ஸ்மார்ட் சிட்டி குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x