

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக உரிமையை நிலைநாட்டியதற்காக வரும் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுதொடர்பாக அதிமுக கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர் சாலைமுத்து முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் பேசியது:
மூவாயிரம் ஆண்டுகள் நிகழ்த்த முடியாத சாதனைகளை மூன்றே ஆண்டுகளில் நிகழ்த்திய முதல்வர், தற்போது முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழக உரிமையை நிலைநாட்டியுள்ளார். இந்த விழாவில் பொதுமக்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அதற்காக வீடுதோறும் அழைப்பிதழ்களை அளித்து கூட்டத்துக்கு அழைக்க வேண்டும்.
வட்டச் செயலர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் தங்கள் வார்டுகளில் ஒலிபெருக்கி அமைத்து விழாவை விளம்பரப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள 100 வார்டு மக்களும் குடும்ப சகிதம் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், 37 ஆண்டுகளாக தீர்க்க முடியாத தென்மாவட்ட விவசாய மக்களின் ஜீவாதார பிரச்சினை மற்றும் மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, பாராட்டு விழாவில் மதுரை மக்களை திரளாக கலந்துகொள்ள செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.