

சென்னை புத்தகரம் சந்தோஷ் நகர், முல்லை தெருவில் சாலை போடும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐயன் சந்தோஷ் நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் பி.ராமச்சந்திரன் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது.
கடந்த மார்ச் மாதமே இப்பகுதியில் சாலை போடும் பணிகள் ஆரம்பித்தன. இதற்காக ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டது. புதிய சாலைக்காக ஜல்லி போட்டு ஒரு மாதம் ஆகியும் பணிகள் இன்னும் முடியவில்லை. சாலையில் ஜல்லி கொட்டப்பட்டிருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. குறிப்பாக முதியோர் நடந்து செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியை கேட்ட போது, “முல்லை தெரு உட்பட 24வது வார்டில் 386 சாலைகளை அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 250 சாலைகளைப் போட்டு முடித்துள்ளோம். மீதமுள்ள சாலைகளை ஒவ்வொன்றாக போட்டு வருகிறோம்.
முல்லை தெருவில் பணிகள் ஆரம்பித்த போது, பொருட்களை கொண்டு வர வேண்டிய லாரிகள், ஆர்.டி.ஓ அலுவலகம் கொள்ளளவு வரம்பு நிர்ணயித்ததற்காக ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். தற்போது ஸ்டிரைக் முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சாலை போடப்படும்” என்றார்.