Published : 28 Dec 2023 06:30 AM
Last Updated : 28 Dec 2023 06:30 AM
சென்னை: ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெல்டிங் பணியின்போது இந்த சோக நிகழ்வு நடைபெற்றதாக தகவல் வெளி யாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தண்டையார்பேட்டையில், மத்தியஅரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) எண்ணெய் சுத்திகரிப்பு மையம்செயல்பட்டு வருகிறது. கப்பல் களில் வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை இங்கு குழாய்கள் மூலம்கொண்டுவரப்பட்டு பாய்லரில் (எத்தனால்) சேமித்து வைக்கப்படுகிறது.
பின்னர், அவை சுத்திகரிக்கப்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணி யாற்றுகின்றனர். இந்நிலையில், இங்குள்ள பாய்லரில் நேற்று காலை வழக்கமான பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது, குழாய்களில் ஏற்பட்ட பழுதை வெல்டிங் மூலம் சரி செய்யும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த பணியில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் (50) மற்றும் சரவணன், பன்னீர் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பாய்லர் வெடித்துள்ளது. இதனால், ஏற்பட்ட தீ பிழம்பில் சிக்கி ஊழியர் பெருமாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். பன்னீர், சரவணன் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் மற்றும்நுரைகலவை மூலம் பற்றி எரிந்ததீயை போராடி அணைத்தனர்.
இதையடுத்து, காயம் அடைந்தசரவணன், பன்னீர் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள், ஐஓசி அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த பெருமாள் குடும்பத்துக்கு ஐஓசி நிறுவனம் சார்பில் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT