Published : 27 Dec 2023 06:20 AM
Last Updated : 27 Dec 2023 06:20 AM
சென்னை: கொளத்தூர் ராஜா தோட்டம், ஜமாலியா லேன் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு மறு கட்டுமானப் பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மா.அன்பரசன், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் திட்டப் பகுதியில் ரூ. 27.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 162 புதிய குடியிருப்புகள், ஜமாலியா லேன் பகுதியில் ரூ. 17.63 கோடியில் கட்டப்பட்டுவரும் 130 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட கால தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் அதிக ஊழியர்களை பணியமர்த்தி, கட்டுமானப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு- மீனாம்பாள் சிவராஜ் நகர் பகுதியில் ரூ. 41.30 கோடியில் கட்டப்பட்டுவரும் 240 புதிய குடியிருப்புகள், மயிலாப்பூர் குயில் தோட்டம் பகுதியில் ரூ.65.79 கோடியில் கட்டப்பட்டு வரும் 384 புதிய குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 26 இடங்களில் கட்டப்பட்டு வரும் 8,723 அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் எனவும், கட்டுமானத்தின் தரத்தை மூன்றாம் தரப்பு வல்லுநர் குழுக்களைக் கொண்டு ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை பெற வேண்டும் என வாரிய பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, வாரிய தலைமைப் பொறியாளர் வே.சண்முகசுந்தரம், மேற்பார்வை பொறியாளர்கள் இளம்பரிதி, செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT