Published : 27 Dec 2023 06:03 AM
Last Updated : 27 Dec 2023 06:03 AM
சென்னை: செங்கல்பட்டு திருமணியில் உள்ள தொழுநோய் மருத்துவமனைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்ட ஆதரவு அறக்கட்டளையின் சார்பில் டி. தமிழ்வாணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில் மத்திய அரசுக்கு சொந்தமான தொழுநோய் பயிற்சி, ஆராய்ச்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுமார் 550 ஏக்கர் நிலம் திருமணி, ஆலப்பாக்கம், மேல்மணியூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ளது. இதில் ரூ.60 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்து அடுக்குமாடி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். தற்போது இந்த ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சிலர் போலி பத்திரம் தயாரித்து விற்பனையும் செய்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெயரளவில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஏனெனில் இந்த மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர்கள், உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்த மருத்துவமனைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தியும், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.சத்தியனும் ஆஜராகி வாதிட்டனர். அப்போது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க கடந்த பிப்.23-ம் தேதி மத்திய அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவே சரியான தருணம் என்பதால், மத்திய அரசு இந்த மருத்துவமனைக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அந்த நிலங்களை மீட்க சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT