

சென்னை: சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளில் பால் ஊற்றியும், பூக்களை தூவியும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். ‘காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்கி இயற்கையைக் காக்க உறுதி ஏற்போம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்26-ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில்ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எனும் ஆழிப் பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு எழும்பி 14 நாடுகளின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. தமிழகத்திலும், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை பகுதியையும் சுனாமி தாக்கியது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 205 பேரும் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சேதம் அடைந்தன.
பால் ஊற்றி, பூத்தூவினர்: இச்சம்பவத்தின் 19-ம் ஆண்டுநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் பால் ஊற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மயிலை நொச்சிக் குப்பத்தில் தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு.பாரதி தலைமையில் மீனவர்கள் ஊர்வலமாக கடலுக்குச் சென்று கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். இதேபோல், மயிலைநொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் சமூக வலைதளப் பதிவு: சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், ‘சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் முதல் படியாக இயற்கையைக் காக்க உறுதி ஏற்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதளப் பதிவில், ‘இயற்கையின் இரக்கமற்ற நியதியால் உருவான சுனாமி எனும் ஆழிப் பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஒவ்வோர் ஆண்டும்சுனாமி தினத்தன்று அஞ்சலி செலுத்துவதோடு நின்றுவிடாமல், புயல் கனமழையால் இன்றளவும் அச்சுறுத்தப்பட்டு வரும் மீனவர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்த முறையான செயல் திட்டம் வகுக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, அமமுக கட்சிகள் சார்பிலும் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.