Published : 06 Jan 2018 09:34 PM
Last Updated : 06 Jan 2018 09:34 PM

தமிழக அரசின் அலட்சியத்தால் விஏஓக்கள் போராட்டம்; சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி: வைகோ கண்டனம்

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கிராம நிர்வாக அலுவலர்கள் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதிப்படுவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:

“தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதல் போன்றவை இணையதள சேவை மையங்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புகை வழங்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதள சேவைக்கு ‘மோடமும்’ வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதனால் அவர்கள் சொந்தச் செலவில் அரசுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இணையதளக் கட்டணத்திற்காகச் செலவிடப்படும் பணத்தை வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது.

கடந்த 2017 டிசம்பர் 15 ஆம் தேதியிலிருந்து 22 நாட்களாக தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மடிக் கணினிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.

இதனால் உரிய நேரத்தில் சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்றி, மக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x