Published : 25 Jan 2018 02:08 PM
Last Updated : 25 Jan 2018 02:08 PM

நாளை நமதே பெயரில் சுற்றுப்பயணம்: கமல்ஹாசன் பேட்டி

தனது சுற்றுப்பயணத்துக்கு 'நாளை நமதே' என பெயர் வைத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது.

''மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய யோசித்தேன். இந்த நிகழ்வுக்கு ஒரு பெயர் வேண்டும் என்று கேட்டார்கள். இந்த சுற்றுப்பயணத்துக்கு ஒரு பெயர் கேட்டார்கள். யோசிக்காமலே நான் யோசிக்காமலே வைத்த பெயர் தான் 'நாளை நமதே'. எம்ஜிஆர் படப்பெயராக இருக்கிறதே என்று கேட்டார்கள்.

இருக்கட்டும் 'நாளை நமதே' என்ற எண்ணம் எம்ஜிஆருக்கு இருந்தது. நல்ல நினைவுகள் தான் வருகிறது இந்தப் பெயரைச் சொல்லும் போது. அதனால் வைத்தேன்.அதே எண்ணம் எனக்கும் உண்டு.

அரசுப் பேருந்துகள் லாபத்தில் தான் இயங்க வேண்டும் என்று யார் சொன்னது. லாபத்திற்கான, வருமானம் ஈட்டும் துறையாக மட்டும் எல்லா துறைகளும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஏழைகளுக்கு உதவும் துறைகளில் அரசு மானியம் தருவது நல்ல அரசு செய்ய வேண்டிய ஒரு கடமை. முதலீடுகள் எல்லாம் தனியார் பேருந்துகள் வைத்திருப்பவர்கள் தான் அரசுப் பேருந்து ஓடக்கூடாது என்று நினைப்பார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை கண்ட இடத்தில் பாடக்கூடாது. எல்லோரும் ஒரு மாதிரி இருக்க மாட்டார்கள். அதற்குரிய சரியான இடத்தில் தான் பாட  வேண்டும் என்பது எனது கருத்து.

'நாளை நமதே' திட்டத்தின் அடிப்படையில் ஒரு கிராமத்தை நாங்கள் தத்தெடுப்பதாக இருக்கிறோம். ஏனென்றால் இயன்றதைத்தான் செய்யப் போகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். என்னென்ன தேவை என்பதை சொல்லும் போது அதை நிவர்த்தி செய்வதும் கடமையாகிறது. ஆகவே அதை முதலில் செய்யப் போகிறோம்.”

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x