விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த் | கோப்புப்படம்
விஜயகாந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், அவர் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in