

தூத்துக்குடி மழை பாதிப்புகளை மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதி, சேதமடைந்த கோரம்பள்ளம் குளம், அந்தோணியார்புரம் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் சேதமடைந்த குடிநீர் நீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோயில், அரசு மருத்துவமனை, பொன்னன்குறிச்சியில் சேதமடைந்த வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் பயிர் சேத விவரங்கள், மின்கம்பங்கள் சேதம், ஏரலில் சேதம் அடைந்த பாலம், சேதமடைந்த வணிக நிறுவனங்கள் மற்றும் வாழவல்லான் பகுதியில் சேதமடைந்த மின்கோபுரம், தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அந்தந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக அரசு உயர் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கி கூறினர்.
மத்திய நிதியமைச்சரிடம் தமிழக அரசு 72 பக்க மனு: ‘தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு நிதி, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க போதுமானதாக இல்லை. எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு நிதி தேவைப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை...” - இபிஎஸ் சாடல்: “சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கும் கட்சி அதிமுக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கமே போய்விட்டது. காரணம், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் வாக்குகள் சிதறிவிடும் என்ற அச்சத்தில், முதல்வர் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்” என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசயுள்ளார்.
மேலும், மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் தமிழகத்தை பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார். முன்னதாக, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்: அதிமுக எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என உறுதி மேற்கொள்ளப்பட்டது என்பன உள்ளிட்ட 23 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
வேங்கைவயல் சம்பவ வழக்கு - அன்புமணி, அண்ணாமலை கருத்து: ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர்.
இதனிடையே, "வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்து விட்டது, முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஓராண்டாகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு எப்போது? - காங். தகவல்: “இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணி சார்பில் விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்து விவாதித்து வருகிறோம். என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தக்க சமயத்தில் செய்வோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“முன் எப்போதும் இல்லாத போரை எதிர்கொள்கிறோம்” - ஹமாஸ் தலைவர்: “ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம், கடுமையான, முன் எப்போதுமில்லாத போரை எதிர்கொள்கிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையை நசுக்கும் பாதையில் அல் கஸ்ஸாம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் ஹமாஸ் ஒருபோதும் அடிபணியாது” என்று ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை நாங்கள் குறிவைத்தோம். அவர்களில், 1,500-க்கும் மேற்பட்டோரை நாங்கள் கொன்றுள்ளோம். எங்கள் தாக்குதலில் 3,500-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். 750 இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். யாயா சின்வரின் இந்த தரவுகளை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நைஜீரியாவில் கொலைவெறித் தாக்குதல் - 113 பேர் பலி: நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
“புதிய இந்திய தண்டனைச் சட்டம் கொடூரமானது” - ப.சிதம்பரம்: புதிய இந்திய தண்டனைச் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை. ஏழைகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டங்கள் அடக்குமுறைக் கருவியாக மாறும். 2024-ஆம் ஆண்டில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முதலில் இந்தச் சட்டங்களை மறு ஆய்வு செய்து, இந்த கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
‘ராமர் கோயில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது’: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு, மக்களின் மத நம்பிக்கையை நேரடியாக அரசியலாக்கும் செயல். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தச் சூழல் காரணமாக, கலந்துகொள்ள இயலாதது வருத்தம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.