Published : 26 Dec 2023 08:19 AM
Last Updated : 26 Dec 2023 08:19 AM
சென்னை: பழைய காற்றாலைகள் அனைத்தையும், தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்குமாறு தமிழ்நாடு மின்வாரியத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.
இதுகுறித்து, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பழைய காற்றாலைகளை புதுப்பித்து அவற்றின் திறனை அதிகரிப்பதற்கான காற்றாலை திட்ட திருத்தப்பட்ட வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மின்சாரம்உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் காற்றாலைகள் பழமையாக இருந்தால் அவற்றை தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம், அவற்றின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக, காற்றாலைகளின் இறக்கைகளின் உயரம் 120 முதல்140 மீட்டர் உயரம் இருக்க வேண்டும். மேலும், அதன் வடிவமைப்பு, திறன் ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும். இதற்குத் தேவையான வசதிகளை தமிழ்நாடு மின்வாரியம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை தர கோரிக்கை: இதுகுறித்து, காற்றாலை மின்னுற்பத்தியாளர்கள் கூறுகையில், ``பழைய காற்றாலைகளை புதுப்பித்தல் தொடர்பாக மத்திய புதியமற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அறிவுறுத்தி உள்ளதன் பேரில், காற்றாலை உற்பத்தியாளர்களை தமிழக மின்வாரியம் அழைத்து பிரச்சினைகளைக் கேட்க வேண்டும். அதன் அடிப்படையில், மின்வாரியம் அறிக்கை தயாரித்து மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைஅமைத்துள்ள குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், காற்றாலைகளை புதுப்பிக்கத் தேவையான நிதியை வங்கிக் கடன் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, தேவையான இடத்தையும் கையகப்படுத்தித் தர வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ``காற்றாலை மின்னுற்பத்தியாளர்களிடம் ஆலோசனை நடத்துவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அரசிடம் இதுகுறித்து அனுமதி பெற வேண்டியுள்ளது. எனினும், இதுபற்றி அரசிடம் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT