Published : 26 Dec 2023 07:03 AM
Last Updated : 26 Dec 2023 07:03 AM

இன்று சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்: அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

நாகர்கோவில் / நாகப்பட்டினம்: சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 19-வது ஆண்டு நினைவு தினமானஇன்று கடற்கரை கிராமங்களில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் அதிகாலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன. சென்னை, புதுச்சேரி,கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பல ஆயிரம் பேர் கடல்அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் சுனாமியால் 1,017 பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி 19 ஆண்டுகளைக் கடந்த பின்பும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகம் ஒருபுறமிருக்க, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமடையாத நிலையிலேயே இன்றும் அவர்கள் உள்ளனர். இயற்கை சீற்றங்களில் இருந்துமீனவர்களை காக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கன்னியாகுமரி யில் ஹெலிகாப்டர் மீட்பு மையம்அமைக்க வேண்டும் என அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமங்களில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

நாகை மாவட்டம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில், இன்று சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை (அரசு கணக்கெடுப்பின்படி) 6,065 பேர். இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231 பேர். மற்றவர்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, நடப்பாண்டு, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் இன்று (டிச.26) காலை 9 மணியளவில், 19-வது ஆண்டு சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் மற்றும்அனைத்துத் துறை அலுவலர்கள், சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா தங்கும் விடுதிமாணவிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x