

திருச்சி: தமிழக வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு வீண்பழி சுமத்துகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்சி விமானநிலைய புதிய முனையத்தை ஜன.2-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த பிரச்சினை ஏற்பட்டபோது, அதுகுறித்து பேசிய என் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக பேசிய எம்.பி. தயாநிதிமாறன், அமைச்சர் டிஆர்பி.ராஜா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 3-வது இடத்துக்கு பின்தங்கியிருப்பதன் மூலம் திமுக ஆட்சி யின் செயல்பாடு தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர் உதவி: புயல், வெள்ள காலங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பாதிப்புகளைத் தடுக்கமுடியும். தென் மாவட்ட பாதிப்புகளைப் பார்த்து, மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தானாக முன்வந்து மத்திய அரசிடம் இருந்து உதவிகளைப் பெற்று தந்துள்ளார். ஆனால், மத்திய அரசு மீது தமிழக அரசு வீண்பழி சுமத்துகிறது. திருச்சியை 2-வது தலைநகரமாக மாற்ற பாஜகவுக்கு வாய்ப்புகிடைக்கும்போது நிறைவேற்றப் படும். இவ்வாறு அவர் கூறினார்.