Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

தார் சாலை: விதிமுறைகள் என்னென்ன?- கையேடு தயாரித்துள்ளது மாநகராட்சி

தார் சாலைகளை அமைக்கும்போது அவை தரமானவையாக இருக்க என்னென்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் கையேட்டை சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது.இது குறித்து மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தரக்கட்டுப்பாடு செய்வதற்காக ஒரு தனிப் பிரிவு சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சாலைகளை அமைக்கும்போது ஒரே மாதிரியான தரக்கட்டுப்பாடு பரிசோதனைகளை ஒரே விதமான செய்முறையில் செய்வதற்கு ஒரு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஒப்பந்ததாரர் தார்கலவை உற்பத்தி செய்யும்போது மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட 2 தொழில்நுட்ப உதவியாளர்கள் உடனிருப்பார்கள். தார் அளவு, வெப்பம், கற்களின் அளவு ஆகியவற்றை அவர்கள் சரி பார்த்த பிறகே சாலை அமைக்கப்படும் இடத்துக்கு கலவை கொண்டு செல்லப்படும்.

அந்த கலவை கொண்டு செல்லப்படும் லாரியின் எண், புறப்படும் நேரம், தார் அளவு, சாலையின் தடிமன் உள்ளிட்ட தகவல்கள் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போனில் உள்ள மென்பொருளைப் பயன்படுத்தி தலைமையகத்துக்கு அனுப்பப்படும். தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரில் சென்று பரிசோதித்து, சாலை தரமாக இருந்தால் கணினி மூலம் ஒரு சான்றிதழ் சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகே ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்கப்படும்.

ஒப்பந்ததாரர் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்கு தண்டனைப் புள்ளிகள் கைப்பேசி ‘ஆப்’ மூலம் வழங்கப்படும். அவ்வாறு 500 புள்ளிகளை பெறும் ஒப்பந்ததாரர், அடுத்த 6 மாதங்களுக்கு மாநகராட்சியின் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு பெற முடியாது.

மேலும் கான்கிரீட் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றின் தரத்தை பரிசோதிக்க மத்திய தார் கலவை நிலையத்தில் பரிசோதனை மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x