

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், இயேசு பிறந்த தினமான நேற்றுஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிர வைத்து, பண்டிகைக்கு தயாராகி வந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று களைக்கட்டியது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் சென்னை மற்றும் புறநகரில்உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
பிரார்த்தனை, திருப்பலி: இதேபோல் நேற்றும் அதிகாலை முதல் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து நேற்றும்சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னைவேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னைஆலயம், எழும்பூர் திரு இருதயஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசா ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான நேற்று குடும் பத்தினருடன் திரையரங்கம், மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, திருவான்மியூர் கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகை பொழுதைகழித்தனர். இதனால், நேற்று கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.