

சென்னை: காமராஜர், கக்கன் போல எளிமையாக வாழவேண்டும் என்ற சிந்தனையை வாஜ்பாய் போன்ற தலைவர்கள்தான் மனதில் விதைத்தார்கள் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறினார். தமிழக பாஜக சார்பில் வாஜ்பாய் 99-வது பிறந்தநாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, டால்பின் தர், மாநில செயலாளர்கள் பிரமிளா சம்பத், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாரத ரத்னா வாஜ்பாய் விருது வழங்கினார். அந்தவகையில், கல்வி பிரிவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பால குருசாமி, வீர விளையாட்டு பிரிவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர், இலக்கியம் பிரிவில் இதிகாச மொழிப்பெயர்பாளர் செ.அருட்செல்வப்பேரரசன், கலை கலாச்சாரபிரிவில் வி.வி.சுந்தரம் ஆகியோர் விருதுகளை பெற்றனர். சிறப்பு விருதுகளை பாஜக மூத்த தலைவர் சுப.நாகராஜன், திருநங்கை வி.ரேகா ஆகியோர் பெற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசும்போது, ‘வாஜ்பாய் போன்றோர்கள்தான், எங்கள் மனதில் காமராஜர், கக்கன் போல எளிமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனைகளை விதைத்தார்கள். அப்படி ஒரு விதையை எங்கள் மனதில் விதைத்ததால் தான் உயர்நீதிமன்ற நீதிபதி என்ற பதவியாக இருந்தாலும், அதனை சாதாரண மேல் துண்டு போல நினைத்து, அந்த பதவியில் இருந்து வெளியேற வைத்தது. முன்பு, மத்திய அரசு கொடுக் கும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது களுக்கெல்லாம், பணத்தை வைத்துக்கொண்டு விருதை பெற முயல்வார்கள். ஆனால், இன்று சாதாரணமான மனிதர்களுக்கு பெரிய பெரிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது’ என்றார். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விருது பெற்றவர்களை காணொலியில் வாழ்த்தி பேசினார்.