

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே வெள்ளத்தால் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, பொதுப்பணித் துறை யினர் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்களே களமிறங்கி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் சாயல்குடி அருகே அவத்தாண்டை கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் உள்ளது. தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கண்மாய் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், கண்மாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற் பட்டு, வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
இதனால் சாகுபடி செய்த நெல், மிளகாய், பருத்தி, வெங்காயம், எள்ளு, உளுந்து, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இது தொடர்பாக பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என, அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, வேறு வழியின்றி கடந்த 3 நாட்களாக கண்மாய் அருகே கருவேல மரக்காட்டில் உணவு சமைத்து அங்கேயே உண்டு, இரவு பகலாக விவசாயிகள், இளைஞர்கள் கண்மாய் உடைப்பை மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி சீரமைத்து வருகின்றனர்.