Published : 10 Jan 2018 09:17 AM
Last Updated : 10 Jan 2018 09:17 AM

குமரி மாவட்ட மக்களுக்கு ரூ.26.38 கோடி நிவாரணம்: முதல்வர் விளக்கம்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒக்கி’ புயலால் காணாமல்போன, மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர்? கடைசி மீனவர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என ஆளுநர் உரையில் உள்ளது. ஆனால், மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுபற்றி முதல்வர் விளக்க வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸும் (குளச்சல்) வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு, நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்ட நிவாரணமாக மத்திய அரசு ரூ.133 கோடியை வழங்கியுள்ளது. தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கையால் குறுகிய காலத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுவரை 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.

புயலால் உயிரிழந்த 14 பேருக்கு தலா ரூ.20 லட்சம், உயிரிழந்த மீனவர் இல்லாத 14 பேருக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்த 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், சிறு காயம் அடைந்த 7 பேருக்கு தலா ரூ.12,700, 2 பேருக்கு தலா ரூ.4,300 வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார உதவித் தொகையாக 30,778 குடும்பங்கள், 1,524 மலைவாழ் குடும்பங்கள், முழுவதும் சேதமடைந்த 1,096 குடிசைகள், காணாமல் போன 234 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. புயலுக்கு பலியான ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட 7,655 உயிரினங்களுக்கு ரூ.24 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ.26 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 700 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ரப்பர், வாழை, கிராம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மாநில நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ.3.56 கோடி நிதி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x