

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்36-வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின்36-வது நினைவு தினம் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், ஜெயக்குமார், வைகைச்செல்வன், ப.மோகன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக எம்.பி.தம்பித்துரை உட்பட தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் அருகே, அதிமுகசார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதில் ‘எம்.ஜி.ஆரின் வழியில்சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கச் செய்திட உழைப்போம். மிக்ஜாம் புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வராத திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம். நீட் தேர்வு விலக்கு, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு, சிலிண்டர் மானியம் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக அரசை, மக்களின் கேள்விக்கு பதில் தராமல் விடமாட்டோம். 2 கோடிக்குமேற்பட்ட தொண்டர் படையோடு, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்று காட்டுவோம்’ என உறுதி மொழி ஏற்றனர்.
இதில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கு பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பி.எஸ் அணி: இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், புகழேந்தி உட்பட தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், திருநாவுகரசர் எம்.பி., மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தொண்டர்கள் ஏராளமானோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பிரேமலதா: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேமுதிகஅவைத்தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்,துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உட்பட நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.ஜி.ஆர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் உட்பட நிர்வாகிகள், புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் செல்வகுமார், போஸ்ட் ஆபிஸ் பாபு, ஹயாத், சிவபெருமாள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் இல்லை என்ற சொல்லை இல்லாமல் ஆக்கிடஅயராது பாடுபட்ட எம்.ஜி.ஆர்.,ஏழை எளிய மக்களின் வலிகள்அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர், சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து அவரின் நினைவு நாளில் அவர்தம் புகழைப் போற்றுவோம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப, தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆர். புகழை போற்றி வணங்குவோம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம்எம்.ஜி.ஆர். அனைவரது நினைவுகளிலும் இன்றும் வாழும் பெருந்தகையாளரான அவரது நினைவு நாளில் கலைத்துறையிலும், அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை நினைவு கூர்வோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மக்களின் இதயங்களை கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வழியில் எந்நாளும் பயணிப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.