

தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் சேத விவரங்கள் தொடர்பான கணக்கெடுப்பை 3 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை 2-வது நாளாக நேற்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டார். காலாங்கரை கிராமத்தில் கோரம்பள்ளம் கண்மாய் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் குளங்களில் 750 உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றைச் சீரமைக்கும் பணிகளில் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தால்தான், தாமிரபரணி தண்ணீரை தேக்கி, விவசாயத்துக்கு விநியோகிக்க முடியும். எனவே, கோரம்பள்ளம் குளக்கரையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கெடுக்க, பல்வேறு மாவட்ட அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகை மக்களுக்கு வழங்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 200 மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. ஏறத்தாழ 3,500 வீடுகள் சேதமடைந்துள்ளன. குடிநீர்,பால் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடையின்றி வழங்கப்படுகிறது. இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை சரிசெய்ய காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகளில் ஏற்பட்ட 175 உடைப்புகளில், 150 உடைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தூத்துக்குடி ஆட்சியர் கோ.லட்சுமிபதி உடனிருந்தனர்.
தொடர்ந்து, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளைப் பார்வையிட்ட தலைமைச் செயலர், “நெல்லையில் குளங்களில்ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 175 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 150 இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் உள்ள 101 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் 70 திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் திட்டப்பணிகளை சரிசெய்வது பெரிய சவாலாக உள்ளது. கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
40 லட்சம் மாத்திரை: தூத்துக்குடி மாவட்டம் ஏரலில்மக்களுக்கு குளோரின் மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியைசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். அவர் கூறும்போது, “தமிழகமுதல்வர் உத்தரவின்படி ரூ.20.16லட்சம் செலவில், 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளன” என்றார். அமைச்சர் பி.மூர்த்தி, சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்.
3,331 மருத்துவ முகாம்கள்: தூத்துக்குடியில் மருத்துவ முகாம்களைத் தொடங்கிவைத்து கனிமொழி எம்.பி. கூறும்போது, “தூத்துக்குடியில் 110 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு, நெல்லை, தென்காசியில் தலா 30, குமரியில் 36 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு என மொத்தம் 206 குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 3,331 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன" என்றார்.
ரூ.1,000 கோடி சாலைகள் சேதம்: தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. மழையால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.