Published : 25 Dec 2023 06:01 AM
Last Updated : 25 Dec 2023 06:01 AM

தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, ஆராதனை பெருவிழா: கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயத்தில் நேற்று இரவு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்ற பெண்கள். | படம்:எஸ். சத்தியசீலன் |

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (திங்கள்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர்பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் உள்ள பெத்லகேம் என்ற இடத்தில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனிதநூலான பைபிள் கூறுகிறது. பூமியில்மனிதராக அவர் பிறந்த நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பெருவிழாஇன்று (திங்கள்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர்பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர்.

குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆராதனை முடிவில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்தையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர்.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். இதேபோல், பெசன்ட் நகர்அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னைஆலயம், எழும்பூர் திரு இருதயஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், சிஎஸ்ஐ திருமண்டலத்தின் தலைமை ஆலயமான கதீட்ரல்பேராலயம், மிகவும் பழமை வாய்ந்தவேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லிஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

குரோம்பேட்டை அமலோற்பவ அன்னை ஆலயம், தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், சேலையூர் புனித மாற்குஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், மறைமலைநகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம், ரயில்நகர் புனித அந்தோணியார் ஆலயம், காட்டாங்கொளத்தூர் லூர்து அன்னை ஆலயம், பேரமனூர் எம்டிசி நகர் புனித ஆரோக்கிய அன்னை உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x