Published : 25 Dec 2023 06:23 AM
Last Updated : 25 Dec 2023 06:23 AM

கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள்: நிவாரணம் கோரி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்கக் கோரி நேற்று கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி: கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிகும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் பெய்த அதிகன மழையின் போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு, மழைநீரோடு கலந்து சென்னை- மணலி புதுநகர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவியது. அது கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் வழியாக எண்ணூர் கடற்பகுதிகளில் கலந்தது.

எண்ணெய் படலம் பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அரங்ககுப்பம், கோரைக்குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு குப்பம் பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதியிலும் பரவியுள்ளது. இதனால், பழவேற்காடு, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் மீனவர்கள் பழவேற்காடு கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியாமல், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

300 பேர் பங்கேற்பு: இந்நிலையில், கடலில் எண்ணெய் கலக்கக் காரணமான சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், நேற்று கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பஜார் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு - பழவேற்காடு மீனவர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பழவேற்காடு கடற்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆரம்பாக்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 300 மீனவர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x