Published : 25 Dec 2023 04:10 AM
Last Updated : 25 Dec 2023 04:10 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவிய வேலாயுதபுரம் கிராம இளைஞர்கள்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய, வேலாயுதபுரம் கிராம இளைஞர்கள்.

கோவில்பட்டி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு எட்டயபுரம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையில், மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடி மழை வெள்ளத்தில் சிக்கியது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்பட்டது. இந்த மக்களுக்கு பல்வேறு ஊர்களை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினர். அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எட்டயபுரம் அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தாங்கள் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை வாங்கி, தூத்துக்குடி மக்களுக்கு வழங்கினர். மேலும், கடந்த 19 முதல் 22-ம் தேதி வரை கிராமத்திலேயே உணவு தயாரித்து, அதனை டிராக்டரில் எடுத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். சொந்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்களை கிராமத்து பெரியவர்கள் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x