கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 328 குளங்களில் உடைப்பு - தலைமைச் செயலாளர் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருநெல்வேலி: "கனமழையால், மொத்தமாக 750 இடங்களில் குளங்கள், கண்மாய் உள்ளிட்டவைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், மொத்தமாக 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகள், நீர்த்தேக்கங்கள், நீரேற்று நிலையங்கள் மற்றும் அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் சிவ்தாஸ் மீனா இன்று (டிச.24) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திருநெல்வேலியைப் பொறுத்தவரையில் குடிநீர் பிரச்சினை சீரடைந்துவிட்டது. தூத்துக்குடியைப் பொறுத்தவரையில், குடிநீர் விநியோகம் செய்யமுடியவில்லை. காரணம், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், உள்ள குடிநீரேற்று நிலையங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சில பகுதிகளில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், ஜெனரேட்டர் பயன்படுத்தி அதன்மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத காரணத்தால், ஒருசில இடங்களில் தண்ணீர் திறக்க முடியவில்லை. குறிப்பாக, கூட்டுக்குடிநீர் திட்டங்களை நம்பியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.

அந்தப் பகுதிகளில் தண்ணீர் வழங்குவதற்காக, மற்ற மாவட்டங்களில் இருந்து 85 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, தண்ணீர் வழங்கப்படுகிறது. கனமழையால், மொத்தமாக 750 இடங்களில் குளங்கள், கண்மாய் உள்ளிட்டவைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், மொத்தமாக 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை எல்லாம் சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு உடைப்புகளை சரிசெய்து, இவற்றில் தண்ணீர் தேக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, நெல்லை, தூத்துக்குடியில் கனமழையால் பாதிப்படைந்துள்ள குடிநீர் திட்டப் பணிகளுக்கு உதவி செய்வதற்காக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கேரளாவில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள நீர்வளத்துறையின் துணை முதன்மைப் பொறியாளர் சுரேஷ் தலைமையில் 9 அதிகாரிகள் திருநெல்வேலி வந்துள்ளனர். கூட்டுக்குடிநீர் திட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கருப்பந்துறை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு ஆலோசனை வழங்குகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in