எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணூர் விரைவு சாலையில் மீனவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன்
எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணூர் விரைவு சாலையில் மீனவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன்

நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி திருவொற்றியூர், எண்ணூரில் மீனவர்கள் சாலை மறியல்

Published on

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த அதி கனமழையின்போது, எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு கலந்தது. இதனால், மீனவர்களின் படகுகள், வலைகள்சேதம் அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவியை அறிவித்துள்ளது.

12 மீனவ கிராமங்கள் பாதிப்பு: இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தண்ணீர் ஓடைகுப்பம், திருவொற்றியூர் குப்பம்,கே.வி.கே. குப்பம், பெரிய காசிகோயில் குப்பம், திருச்சிணாங்குப்பம், நல்ல தண்ணீர் ஓடை குப்பம்உள்ளிட்ட 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நிவாரண உதவிகளை உயர்த்தி விரைவாக வழங்கக் கோரி பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோயில் அருகில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை துணை காவல் ஆணையர் சக்திவேல், உதவி ஆணையர் சிதம்பர முருகேசன், மீன்வளத் துறை இணை இயக்குநர் இந்திரா, திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

500-க்கும் மேற்பட்டோர் பேர் கைது: ஆனால், அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், எண்ணூரில் சின்னகுப்பம், பெரிய குப்பம், காட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளை அதிகரித்து வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சேதம் அடைந்த மீன்பிடி படகுகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக, மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. முழு விவரம் > யாருக்கெல்லாம் நிவாரண நிதி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in