தேசிய விவசாயிகள் தினம் | உழவர்களுக்கு உறுதுணையாக அரசு நிற்கும்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினம் | உழவர்களுக்கு உறுதுணையாக அரசு நிற்கும்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: தேசிய விவசாயிகள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உழவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு நின்று காக்கும் என தெரிவித்துள்ளார்.

தேசிய விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிச.23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள், விவசாயிகளுக்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தேசிய விவசாயிகள் தினத்தில் ஆத்ம நிர்பார் (சுயசார்பு இந்தியா) பாரதத்தை உருவாக்க தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமது விவசாயிகள் அனைவருக்கும் நன்றி சொல்வோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உலகத்தார்க்கு அன்னம்அளித்து, சமரசமின்றி சமத்துவமாய்உழவு செய்து தான் ஈட்டும் பொருட்களையும் வேளாண்மைக்கு அர்ப்பணித்து நாட்டுக்கு முதுகெலும்பாய் திகழும் தன்னலமற்ற அனைத்து விவசாய பெருமக்களுக்கும் தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். இந்நாளில் விவசாய பெருங்குடி மக்களின் சேவைகளையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: உலகுக்கே உணவளிக்கும் விவசாய மக்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். விவசாய நலன் சார்ந்து பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, விவசாயம் செழித்து, விவசாயிகள் வாழ்வு ஏற்றம் பெற வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நமது அன்றாட வாழ்க் கையில் விவசாயிகளின் பங்களிப்பு முக்கியமானவை. விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இயற்கை பேரிடர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு விதமான சவாலான சூழலிலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in