

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல், மானாவரிப் பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, விளைநிலங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயாபுரம், விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பாசிப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, செடியிலேயே முளைத்து போய்விட்டன. மக்காச்சோளம், கம்பு,பருத்தி, மிளகாய், சின்ன வெங்காயப் பயிர்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி பாசனப் பகுதியில், நெற்பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் விளைநிலங்களில் பல இடங்களில் 3 முதல் 4 அடி உயரத்துக்கு மண் திட்டுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நெல் மற்றும் மானாவரிப் பயிர்களுக்கு தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பயிர் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து பயிர்களுக்கும் விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள மண் திட்டுகளை அரசே அப்புறப்படுத்தி, விளைநிலங்களை சீரமைத்துத் தர வேண்டும். அல்லது அதற்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும், காப்பீட்டுத் தொகை முறையாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.