

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை மீட்டெடுக்கும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது என்று தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது நீர்வடிந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட வேளாண்மை – உழவர்நலத் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் களத்தில் இருந்துஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு, நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேரள உடன்பிறப்புகளுக்கு நன்றி: கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள மாநிலமக்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “கேரள உடன்பிறப்புகளின் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.