

சென்னை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. சுசீலா என்கிற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1935-ம் ஆண்டு பிறந்த ராஜேந்திரன் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். 1957-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி உதவி ஆட்சியர், துணை ஆட்சியர்போன்ற பொறுப்புகளை வகித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரானார். அப்போது 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை திறம்பட எதிர்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தார். அந்த அனுபவம் மூலம் 1999 ஒடிசா ஆளுநராக இருந்தபோது வந்த புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989-ம் ஆண்டில் முதல்வராக கருணாநிதி வந்த பிறகும் அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றினார். யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், நியூயார்க்கில் அதன் திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொது சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தனுஷ்கோடி இயற்கைச் சீற்றத்தை திறமையாக கையாண்டார். அந்த அனுபவத்தைக் கொண்டு 1999-ல் ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்வரான பின்னும் அப்பதவியில் நீடித்தார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.