

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கவிதா (31), 170 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டிசம்பர் 23-ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் யோகா பயணம், டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணி வரை நீண்டு சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பதிவு செய்து வந்த கின்னஸ் அதிகாரிகள், அதே நாளில் சான்றிதழை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து சாதனையை மேற்கொண்ட கவிதா பேசும்போது, ''கடந்த 17 வருடங்களாக யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். தற்போது மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி மூலம் சுகப்பிரசவம் ஆவது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.
ஒருமுறை வேலை காரணமாக 4 நாட்கள் தொடர்ந்து கண் விழிக்க நேர்ந்தது. ஆனாலும் அப்போது சோர்வின்றிப் பணிபுரிந்தேன். எனில் அதைவிட அதிகமாக எவ்வளவு நேரம் நம்மால் கண் விழிக்க முடியும் என்று ஆய்வு செய்தேன். கண் விழிப்பதோடு நிறுத்தாமல், அதை சாதனையாக்க வேண்டுமெனத் தோன்றியது.
முன்னதாக நாசிக்கைச் சேர்ந்த பெண்ணொருவர் 103 மணி நேரம் தொடர்ந்து யோகா செய்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க முடிவுசெய்தேன். 180 மணி நேரம் இலக்கு நிர்ணயித்தோம்.
போட்டியில் ஒரு மணி நேரத்துக்கு 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கவில்லையெனில் மொத்தமாகச் சேர்த்து 6 மணி நேரத்துக்கு அரை மணிநேரம் எடுக்கலாம். அந்த நேரங்களில் ஓய்வெடுத்தேன். உணவு உண்டேன்.
அதைத் தொடர்ந்து 175 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்தேன். ஒரு சில நொடிகள் ஏதேனும் தவறு ஏற்பட்டால், கின்னஸ் அதிகாரிகள் தரப்பில் ஒரு மணி நேரம் குறைக்கப்படும். அந்த வகையில் 170 மணி நேரத்துக்கான சான்றிதழை வழங்கினர் அதிகாரிகள்.
இவையனைத்துக்கும் என்னுடைய விடாமுயற்சியும், குடும்பத்தினருமே காரணம். மூன்றரை வயதுக் குழந்தைக்குத் தாயான என்னாலும் கின்னஸ் படைக்க முடியும் என்று என் கணவன் பரணிதரன் நம்பினார். என் அப்பாவின் ஊக்கமும், அம்மாவின் அரவணைப்பும் ஆரோக்கியமான உணவுகளும் என்னைத் தொடர்ந்து களைப்பில்லாமல் யோகா செய்ய ஊக்குவித்தன.
நாம் நினைப்பது நடக்கும் என்று நம்பினால் அது நிச்சயமாக நடக்கும். அதேநேரம் நமது எண்ணம் நேர்மறை சிந்தனையாகவே இருக்கவேண்டும். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதைப் புரிந்துகொண்டு விடாமுயற்சியுடன் இயங்கினால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் கவிதா.
படங்கள்: எல்.சீனிவாசன்