

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணைகளில் ஒன்றான மணி முத்தாறு அணை நேற்று மாலையில் நிரம்பியது. அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பிற இடங்களில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,757 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,189 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 151.28 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.58 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடு முடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக இருந்தது.
ஆட்சியர் எச்சரிக்கை: இதனிடையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் மணி முத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளதால் உபரி நீர் விநாடிக்கு 1,500 கனஅடி முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும். நேற்று முதல் மழை ஏதுமில்லை. வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை. ஆயினும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும், ஆங்காங்கே இருந்து அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது. எனவே, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக் கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக் கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.
எனவே பொது மக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருமழை வெள்ளக் காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகே அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. இதுபோல் விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உராய்ந்து கொண்டுள்ளதா, அறுந்துள்ளதா என்பதை கவனமாக பார்த்த பிறகே செல்ல வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.