சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலித்து நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலித்து நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 98 சதவீதம் நிவாரணம் சென்றுள்ளது. மேலும் 5 லட்சம் பேர் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும். தென் மாவட்ட மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது. நம் இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றும் மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு.நாம் ஒற்றுமையாக சகோதரர்களாக உள்ளோம். இந்த ஒற்றுமைஉருவாவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவு மக்களும் அமைதியாக வாழ்கின்றனர். இதை தடுக்கஒரு கூட்டம் தவியாய் தவிக்கிறது. ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் வெற்றி பெற முடியாது.

மழை, வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவித்து, 2 வாரத்துக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 98 சதவீதம் நிவாரணம் சென்றுள்ளது. மேலும் 5 லட்சம் பேர் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இதற்கிடையில், தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம் வந்தது.அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்து, விரைவில் வழங்க உள்ளோம். வெள்ள சேதத்தை ஆய்வுசெய்ய சென்றபோது, அங்குள்ள மக்கள் இன்முகத்துடன் வரவேற்றதை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். ஆனால், இன்று அர்த்தமின்றி குறை கூறுகின்றனர்.

நூற்றாண்டு காணாத மழைபெய்து இதுபோன்ற பேரிடர்ஏற்படும்போது, எதிர்க்கட்சியான அதிமுகவும் அரசுக்கு துணைநிற்கவேண்டும். அப்படி யாரும் வரவில்லை. கரோனா காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோதும்அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை. அப்போதும்கூட, எதிர்க்கட்சியான திமுகதான் முன்னின்றுசெயல்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இதுபோன்ற நேரத்திலும் மலிவான அரசியல் செய்கிறார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in