

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் 4,303 நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. 372நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த அக்டோபரில் தொடங்கி பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை ஜனவரி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தபோது, மிக்ஜாம் புயல் உருவாகி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நெற்களஞ்சியத்தில் மழையில்லை: அதேபோல, சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதி கனமழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. பரவலாக மழை பெய்வதும், பின்னர்வெயில் அடிப்பதுமாக உள்ளது. டிசம்பரில் 108.02 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 52 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.
922.93 மி.மீ. மழை: நடப்பாண்டில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், ஆண்டு சராசரி மழையளவான 1,098.4 மி.மீ.க்குப் பதிலாக நேற்று முன்தினம் வரை 922.93 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,303 ஏரி,குளம், குட்டைகளில், 26 நீர்நிலைகள் மட்டுமே முழுமையாக நிரம்பிஉள்ளன. 76 முதல் 99 சதவீதம் வரை 69 நீர்நிலைகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 834 நீர்நிலைகளும், 26 முதல் 50 சதவீதம் வரை1,361 நீர்நிலைகளும், 25 சதவீதத்துக்கும் கீழ் 1,641 நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. 372 நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
வழக்கமாக சம்பா, தாளடி பருவ சாகுபடிக்கு விவசாயிகள் காவிரிப் பாசன நீரை மட்டுமே நம்பியிருப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு காவிரியில் உரிய தண்ணீர் வராத நிலையில், பாசனநீரைப் பயன்படுத்தும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா,தாளடி சாகுபடியில் ஈடுபடவில்லை. பம்புசெட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே, சம்பா,தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர். மானாவாரிப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மழையை நம்பி நிலக்கடலை, சோளம், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதுவரை பெய்த மழையை வைத்து சாகுபடி பணிகளைத் தொடங்கிவிட்டனர். மீதியுள்ள நாட்களுக்கு மழை பெய்தால் மட்டுமே, இந்தப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இதுவரை போதிய மழை பெய்யாத நிலையில், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.