Published : 23 Dec 2023 06:15 AM
Last Updated : 23 Dec 2023 06:15 AM
சென்னை: தென் தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், 4 மாவட்டங்களிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், முழுமையான சேத கணக்கெடுப்புக்குப் பின்னர் முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். இது தொடர்வாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பேரிடர் மீட்புப் படை, காவல், தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த 3,400-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 323 படகுகள்பயன்படுத்தப்பட்டன.
தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 67 முகாம்களில் 17,161 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 43 சமூக உணவுக் கூடம் மூலமாக60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது. பெரிய அளவில் 5 மத்திய சமையல் கூடங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தினமும் 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுவரை 5 லட்சம் உணவுப்பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது பிற மாவட்டங்களின் உதவியுடன் அரசின் சேவைகள் அனைத்தையும் சீராக வழங்கும் வகையிலான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 4 மாவட்டங்களிலும் உறுதி செய்யப்பட்ட வகையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 2,355 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மொத்தம் 3,700 குடிசைகள், 170 கான்கிரீட் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுதவிர 318 பசு, எருமை மாடுகள், 2,587 ஆடுகள், 41,500 கோழிகள் இறந்துள்ளன.
1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்.. நான்கு மாவட்டங்களிலும் 1.83லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் சேதம், கால்நடைகள் இறப்பு, மீனவர்கள் பாதிப்பு தொடர்பாக கணக்கெடுப்பு மேற்கொள்ள, மற்ற மாவட்டங்களில் இருந்து வருவாய், கால்நடை, மீன்வளம், வேளாண்மைத்துறை அலுவலர்கள், தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பைத் தொடங்கிவிட்டனர். சேதம் குறித்த முழு விவரங்கள், கணக்கெடுப்புக்குப் பின்னரே தெரியும். அதனடிப்படையில் முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT