Published : 18 Jan 2018 01:46 PM
Last Updated : 18 Jan 2018 01:46 PM

இலங்கை, தென்னாப்பிரிக்கா காசுகள்: சேதுக்கரையில் கண்டெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளை ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

18marafi_stud-pathselvamமாணவர் பாதசெல்வம்.

பாண்டியர், சோழர், டச்சுக்காரர் கால காசுகளை ஏற்கெனவே கண்டெடுத்து சேகரித்துள்ள அவர்கள், தற்போது இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேயா நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

இது பற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே. ராஜகுரு கூறியதாவது :

திருப்புல்லாணியுடன் வெளிநாட்டு தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் ராமாயாண காலத்துடன் தொடர்புடையவை. சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் முன்னோர் காலத்திலேயே இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்வார்கள். மேலும், வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில் கடலில் கலக்கிறது. இதனால் இந்தக் கடலோரம் பழங்காலக் காசுகள் கிடைப்பதுண்டு.

ஆங்கிலேயர் ஆட்சியில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராட இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது, அங்குள்ள காசுகளை கொண்டு வந்துள்ளனர்.

திருப்புல்லாணி இந்திரா நகரைச் சேர்ந்த பாதசெல்வம் என்ற எட்டாம் வகுப்பு மாணவர், இலங்கை சதம் காசுகளை சேதுக்கரையிலும், தென்னாப்பிரிக்கா பென்னி காசை திருப்புல்லாணியிலும் கண்டெடுத்துள்ளார்.

18marafi_student-visaliமாணவி விசாலி.rightஇலங்கை தாளிப்பனை காசுகள்

இலங்கை காசு 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை கி.பி. 1901, 1912, 1926-ம் ஆண்டுகளைச் சேர்ந்தவை.

இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அதன் அருகில் காசின் மதிப்பு தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் அரை என்னும் பின்னம் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ளதைப் போன்ற தமிழ் எண்ணுருவில் உள்ளது. தாளிப்பனை இலங்கையில் அதிகம் காணப்படும் பனை மர வகை ஆகும். இவை வட்டவடிவ செப்புக் காசுகள் ஆகும்.

தென்னாப்பிரிக்கா பென்னி

1 பென்னி காசு தென்னாப்பிரிக்கா ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, கி.பி. 1941-ல் ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டது. இதில் மன்னர் மற்றும் பாய்மரக் கப்பலின் படங்கள் உள்ளன. இது பெரிய அளவிலான வட்டவடிவ வெண்கலக் காசு ஆகும்.

மலேயா சென்ட்

திருப்புல்லாணியைச் சேர்ந்த விசாலி என்ற பத்தாம் வகுப்பு மாணவியின் பாட்டனார் குப்பு, இந்திய விடுதலைக்கு முன், மலேசியா பினாங்குக்கு வேலைக்காக சென்று திரும்பி வந்தபோது 1 சென்ட் காசை அங்கிருந்து கொண்டு வந்துள்ளார். இதை இம்மாணவி வீட்டில் இருந்த பழைய பெட்டியில் தேடி எடுத்துள்ளார்.

18marafi_srilanga-coins 1901, 1912, 1926 ஆண்டுகளைச் சேர்ந்த இலங்கை தாளிப்பணை காசுகள்.

இது ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1943 இல் வெளியிடப்பட்டது. சதுர வடிவத்தில் உள்ள இதன் முனை வட்டமானது. வெண்கலக் காசு. ‘கமிஷனர்ஸ் ஆப் கரன்சி மலேயா’வால் இது வெளியிடப்பட்டுள்ளது. பினாங்கு தற்போதைய மலேசியாவின் ஒரு மாநிலமாக உள்ளது, என்றார்.

வரலாற்றின் ஆதாரமாக இந்த காசுகள் உள்ளன. இப்பகுதிகளில் கிடைக்கும் காசுகளை தேடிக் கண்டறிந்து சேகரிக்கும் பணியை மாணவர்கள் செய்து வருவதன் மூலம், நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரும் அரிய பணியையும் அவர்கள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x